கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் எழுந்தருளியுள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு, விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 100 கிலோ தேனை கொண்டு வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தேனபிஷேகம் நடைபெற்றது.
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதும், முற்கால சோழர்களால் கட்டப் பெற்றதும், சோழ நாட்டில் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் எழுந்தருளியுள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் தேனபிஷேக பெருமான் எனப் போற்றப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி தினத்தன்று இரவு மட்டுமே தேனால் அபிஷேகம் செய்யப்படும். இதைத் தவிர மற்ற நாள்களில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் இந்த விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் வேறு எங்கும் காணமுடியாதது.
30-ஆவது ஆண்டாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு கோயிலில் தேனபிஷேகம் தொடங்கியது. நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, தேனபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதில் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கித் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய தேனபிஷேகம் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
இதில் 100 கிலோ தேன் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தேனபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேன் கொடுத்து பிரளயம் காத்த விநாயகரை தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் சுயம்பு தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேனபிஷேக விழாக் குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.