Enable Javscript for better performance
தஞ்சாவூர் அருகே சோழர்காலச் சிலைகள்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே சோழர் கால சிவலிங்கம், சூரியன், அய்யனார் சிலைகள் அண்மையில் அடையாளம் காணப்பட்டன.

    தஞ்சாவூரிலிருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் 25 கி.மீ. தொலைவிலுள்ள தென்னமநாடு கிராமத்தில் அண்மையில் சரசுவதி மகால் நூலகத் தமிழ் பண்டிதர் மணி. மாறன், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் பா. ஜம்புலிங்கம் ஆகியோர் தென்னமநாட்டைச் சேர்ந்த கார்த்திகேயராஜ், ஆசிரியர் சக்திவேல் உதவியுடன் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்த சிவலிங்கம், சூரியன், பூரணி, புஷ்கலையுடன் கூடிய அய்யனார் ஆகியவை 900 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால சிற்பங்கள் என்பதைக் கண்டறிந்தனர்.

    இதுகுறித்து மணி. மாறன், பா. ஜம்புலிங்கம் தெரிவித்தது:

    தென்னமநாடு - வல்லம் சாலையிலிருந்து பிரிந்து ஆழிவாய்க்கால் கிராமத்துக்குச் செல்லும் பாதையின் மேற்குப் பகுதியில் உள்ள திடலில் சோழர்கால சிவலிங்கம் சிறிய கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் எதிரே கழுத்துக்குக் கீழே மண்ணில் புதையுண்ட நிலையில் அழகிய சூரியன் சிற்பமும் உள்ளது. இந்த ஊரில் ஆலத்தி என்ற பெயரில் 300 ஏக்கரில் அமைந்த பெரிய ஏரி இன்று பெரும் பகுதி விளைநிலங்களாக மாற்றப்பட்டதால் ஏரி சிறிய அளவிலேயே காணப்படுகிறது.  இந்த ஏரியிலிருந்து மிகுநீரை வெளியேற்றக்கூடிய கலிங்கு உள்ளது. இதிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு வேதபுரி என்ற பெயரில் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த ஏரியின் கரையில் வேதபுரீசுவரர் என்ற பெயரில் சிவன் கோயில் இருந்து, பின்னர் பல்வேறு காரணங்களால் அழிவுற்றிருக்கலாம். இந்தக் கோயிலில் இருந்த சிற்பங்களில் எஞ்சியிருப்பவை இந்தச் சிவலிங்கமும், சூரியனுமே. மேலும், இந்த ஊருக்கு வெளிப்புறமாக உள்ள ஒரு குளத்தின் கரையில் சோழர் காலத்தைச் சார்ந்த பூரணி, புஷ்கலையுடன் கூடிய அய்யனார் சிற்பமும் காணப்படுகின்றன.

    ஊரின் கிழக்குப் பகுதியில் உள்ள அய்யனார் தோகைமலை அய்யனார் கோயில் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

    பாண்டிய நாட்டில் உள்ள தோகைமலைப் பகுதியிலிருந்து சில நூறாண்டுகளுக்கு முன் இடம் பெயர்ந்து இப்பகுதிக்கு வந்து வாழ்விடம் அமைத்துக் கொண்ட மக்களால் உருவாக்கப்பட்ட கோயிலாக இது இருக்கலாம்.

    இந்த ஊரின் பெயரே தென்னவன் - பாண்டியன் பெயரில் தென்னமநாடு எனக் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஊர் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று எச்சங்களைக் கண்டறிய முடியும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai