Enable Javscript for better performance
சுமை தூக்கும் தொழிலாளி கொலை:இளைஞருக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    சுமை தூக்கும் தொழிலாளி கொலை:இளைஞருக்கு ஆயுள் தண்டனை

    By தஞ்சாவூர்  |   Published on : 17th April 2015 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகையில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் இளைஞருக்கு வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    நாகை மாங்கோட்டை சாமி கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன்கள் வெங்கடேஷ் (40), முத்துக்குமரன் (34). இவர்களுக்கும், இவரது மைத்துனர் மதன்ராஜூக்கும் இடையே 2012 நவ. 25-ல் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருந்த நிலையில், இவர்களை சுண்ணாம்புக் காலவாய் தெருவைச் சேர்ந்தவரும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவரும் சுமை தூக்கும் தொழிலாளியுமான டி. தட்சிணாமூர்த்தி (24) சமாதானம் செய்ய முயன்றார்.

    அப்போது, தட்சிணாமூர்த்தியை முத்துக்குமரன் பிடித்துக் கொள்ள, வெங்கடேஷ் கத்தியால் குத்தினாராம். இதில் பலத்தக் காயமடைந்த தட்சிணாமூர்த்தி நாகை அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து நாகை நகரக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து வெங்கடேஷ், முத்துக்குமரனை கைது செய்தனர். இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புப் பிரிவும் சேர்க்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். சதீஷ்குமார் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டி. ராஜசேகரன் குற்றஞ்சாட்டப்பட்ட வெங்கடேசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக முத்துக்குமரனுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும் வியாழக்கிழமை விதித்து தீர்ப்பளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai