Enable Javscript for better performance
\\\"மலேசிய பல்கலை.யில் தமிழில் கல்வியியல் படிப்பு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மலேசிய பல்கலை.யில் தமிழில் கல்வியியல் படிப்பு'

    By தஞ்சாவூர்  |   Published on : 28th January 2015 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர், ஜன. 27: மலேசியாவில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழில் கல்வியியல் பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது என்றார் அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாமிக்கண்ணு செபமணி.

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அயலகத் தமிழர்களுக்கு அற இலக்கியங்கள் என்ற தலைப்பில் மலேசியத் தமிழ் மாணவர்களுக்கான பத்து நாள் பயிலரங்கத்தின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

    சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் கல்வியியல் துறை தொடங்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கொண்ட இந்தப் பட்டப்படிப்பில் 2010 ஆம் ஆண்டில் 34 மாணவர்கள் சேர்ந்தனர். இப்போது, 80 முதுகலைப் பட்ட மாணவர்களும், 25 முனைவர் பட்ட மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

    இந்தப் பட்டப்படிப்பில் முதன்மைப் பாடங்களாக இலக்கியம், மொழியியல், இலக்கணம், சமூகவியல் என மொத்தம் 18 பாடங்கள் தமிழில் கற்பிக்கப்படுகின்றன. மேலும், 8 துணைப் பாடங்கள் உள்ளன. தமிழ் மொழியிலேயே ஆய்வேட்டை அளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது, 30 மாணவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள 11 நூல்களில் அற இலக்கியங்களைக் கற்பதற்காக வந்துள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழகமும், மலேசியா சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகமும் இணைந்து 2014 ஆம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில் மாணவர்கள் பரிமாற்றம், ஆசிரியர்கள் பரிமாற்றம் மற்றும் ஆய்வு நூல்கள் வெளியிடுதல், உலகத் தமிழ்க் கல்வி ஆய்வு மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களும் மலேசியா சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றார் சாமிக்கண்ணு செபமணி.

    புலத் தலைவர் செ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்காப்பியர் ஆய்விருக்கை மதிப்புறு பேராசிரியர் சோ.ந. கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, துறைத் தலைவர் சா. உதயசூரியன் வரவேற்றார். முனைவர் உ. பிரபாகரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai