முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
நாட்டாணியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு
By தஞ்சாவூர் | Published On : 14th March 2015 01:02 AM | Last Updated : 14th March 2015 01:02 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட நாட்டாணி கிராமத்தில் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிலை அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
வரலாற்று ஆய்வாளரும் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ் பண்டிதருமான மணி. மாறன், பெüத்த ஆய்வாளரும், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளருமான பா. ஜம்புலிங்கம் ஆகியோர் இதை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து இருவரும் தெரிவித்தது:
நாட்டாணியைச் சேர்ந்த விஜயகுமார், அப்பகுதியில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறிய தகவலின் அடிப்படையில், களப்பணி மேற்கொண்டு இந்தச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள பாண்டிகுலாசினி வளநாட்டு ஏரியூர்நாட்டு கருவுகுலவல்லம் என்ற வரலாற்று சிறப்புமிக்க பகுதியின் புற நகராக அமைந்திருந்த ஊரே இன்றைய நாட்டாணி கிராமம். இந்த ஊருக்குப் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் காணப்படுகின்றன.
பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் முக்குடை, கொடியுடன் தாமரை மலர்கள் திகழ சிலையின் இருபுறமும் சாமரம் வீசும் யட்சன் யட்சியுடன் காணப்படுகிற இச்சிலையின் உயரம் 80 செ.மீ. தலையின் பின்புறம் பிரபை காணப்படுகிறது. நீண்ட காதுகளும், மூடிய கண்களையும் உடைய மகாவீரர் சிலை திகம்பர மேனியாகக் காணப்படுகிறது.
இந்தச் சிலை கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. உள்ளூரில் இந்தச் சிலையைப் புத்தர் எனக் கூறி வருகின்றனர்.
மேலும், இந்த ஊருக்குத் தெற்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புத்தாமூரில் சமணத் துறவிகள் வாழ்ந்துள்ளனர்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் புத்தாமூரில் வாழ்ந்த சமணத் துறவி கனகசேனப்பிடாரன் என்பவர் அல்லூர் அழிசிக்குடி ஏரியைப் பராமரிப்பதில் பெரும் பங்காற்றினார்.
இதன்மூலம், இந்தப் பகுதியில் சமண செல்வாக்கு மிகுந்திருந்தது தெரிகிறது.