Enable Javscript for better performance
கேட்டது தஞ்சை - கிடைத்தது ஒரத்தநாடு- Dinamani

சுடச்சுட

    

    திமுகவில் மற்ற தொகுதிகளைப் போலவே தஞ்சாவூர் தொகுதியைப் பெறுவதிலும் அக்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்தது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் சகோதரர் எஸ்.எஸ். ராஜ்குமார் உள்பட ஏறத்தாழ 20 பேர் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமையகத்தில் மனு அளித்து பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இவர்களில் யாருக்குக் கிடைக்கும் என்பது தொடர்பாக தொண்டர்கள் மத்தியில் ஊகமும், வதந்தியும் நிலவின.

    இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராகப் புதுமுகமான மருத்துவர் அஞ்சுகம் பூபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதனால், தஞ்சாவூர் தொகுதி கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ராஜ்குமார் தரப்பினர் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பழனிமாணிக்கம் புதன்கிழமை இரவு தெரிவித்தது:

    தஞ்சாவூர் தொகுதி கேட்டோம். ஒரத்தநாடு தொகுதியைக் கொடுத்துள்ளனர். அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதி எங்கள் வீட்டு பெண். அவரது தந்தை பூபதி கட்சிக்காக அரும்பாடுபட்டவர். தலைவரின் அறிவிப்பை ஏற்று அண்ணன் - தம்பி இருவரும் கட்சிகாகப் பாடுபடுவோம் என்றார் அவர்.

    முதல் பெண் வேட்பாளர்:   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக இரு கட்சிகளிலும் இதுவரை பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதில்லை.

    மாவட்டத்தில் முதன் முறையாக திராவிடக் கட்சிகளில் தஞ்சாவூர் தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக அஞ்சுகம் பூபதி நிறுத்தப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர் தொகுதியில் நிலவும் உள்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகப் புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.

    இவருக்கு எதிராகக் களமிறங்குவதற்குப் பிரபலமான மற்றும் வலுவான நபர் தேவை என்பதால், ராஜ்குமாரை ஒரத்தநாட்டுக்குத் தலைமை மாற்றியுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இரு எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு:  கும்பகோணம் தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகனுக்கும், திருவிடைமருதூர் தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. செழியனுக்கும் அதேதொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல, திருவையாறு தொகுதியில் மூன்று முறை (1989 - 91, 96 - 2001, 2006 - 11) சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரும், தற்போதைய திமுக தெற்கு மாவட்டச் செயலருமான துரை. சந்திரசேகரன் ஆறாவது முறையாகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

     திமுகவில் நிகழ் சட்டப்பேரவைத் தேர்தலில் பேராவூரணி தொகுதி வேட்பாளர் என். அசோக்குமாரும், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் அஞ்சுகம் பூபதியும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai