Enable Javscript for better performance
தமிழ்ப் பல்கலை.யில் இணையம் மூலம் 90,000 நூல்களைப் பார்க்க வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பல்கலை.யில் இணையம் மூலம் 90,000 நூல்களைப் பார்க்க வாய்ப்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 15th April 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இணையம் மூலம் 90,000 நூல்களைப் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது என்றார் துணைவேந்தர் க. பாஸ்கரன்.

    தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி 50 சதச் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை வியாழக்கிழமை தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியது:

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு 15 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் தலா 10 புதிய நூல்களும், மறுபதிப்பு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. மேலும், தமிழ்க் கலைகள் நூல்களும் வெளிவர உள்ளன.

    மாறி வரும் தொழில்நுட்பச் சூழலில் மின்னணு நூல்கள், மின்னணு இதழ்கள் வருகிற நிலையில் அதையும் பல்கலைக்கழக நூலகத்தில் பெறும் விதமாக இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், 60,000 நூல்களும், 15,000 இதழ்களும் இருக்கின்றன. மேலும், பிரிட்டிஷ் நூலகத்திடமும், அமெரிக்கன் நூலகத்திடமும் அனுமதி பெற்று 90,000 நூல்களைப் பல்கலைக்கழக நூலகத்தின் மூலம் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு ஒரு மாதத்தில் கிடைக்க இருக்கிறது. அதில் சிலவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல 25,000 இதழ்களைப் பெறுகிற வாய்ப்பும் கிடைக்கவுள்ளது.  பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிற பேராசிரியர்களுக்குத் தனித்தனியாகக் கடவுச்சொல் அளித்து, தங்களுடைய இல்லத்தில் இருந்தே செல்லிடப்பேசி வழியே நூல்களைப் படிக்கிற வாய்ப்புகளைச் செய்து தர இருக்கிறோம் என்றார் பாஸ்கரன். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) செ. சுப்பிரமணியன், தேர்வுக் கட்டுபாட்டு அலுவலர் இ. அங்கயற்கண்ணி, தொலைநிலைக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) ச. பரிமளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை ஏப். 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai