தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் புலக் கட்டடத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நூலகக் கட்டடத்தை மையமாகக் கொண்டு 278 மீட்டர் ஆரத்தில் 5 புலக் கட்டடங்கள் த, மி, ழ், நா, டு என்ற வடிவில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பெருந்திட்ட வரைபடத்தின் அடிப்படையில் "மி' வடிவத்தில் ரூ. 3.21 கோடி மதிப்பில் அறிவியல் புலக் கட்டடம் கட்டப்பட்டது. பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையக் குழுவின் ரூ. 2.21 கோடி, தமிழ்ப் பல்கலைக்கழக நிதி ஒரு கோடி ரூபாய் மூலம் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் 1,937 ச.மீ. (20,850 சதுர அடி) பரப்பளவில் உள்ள இந்தக் கட்டடத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, தொல்லறிவியல் துறை, கணிப்பொறி அறிவியல் துறை, கட்டடக்கலைத் துறை, அறிவியல் புல அரங்கம், விலங்குகள் காப்பகம், மகளிர் ஓய்வறை, ஒருங்கிணைந்த அலுவலகம், ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
கட்டடத் திறப்பு விழாவையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் க. பாஸ்கரன் தலைமையில் தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.