முல்லைவனநாதர் கோயில் கும்பாபிஷேகம்
By பாபநாசம் | Published On : 30th January 2016 01:29 AM | Last Updated : 30th January 2016 01:29 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், திருக்கருகாவூரில் உள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்மன் உடனுறை அருள்மிகு முல்லைவனநாதர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கான விழா கடந்த 24-ம் தொடங்கியது. தொடர்ந்த விழா நாள்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தன. பூர்ணாஹூதி நடைபெற்று கடங்கள் புறப்பாடு நடைபெற்று, முல்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து ராஜகோபுரம், சுவாமி, அம்மன், கணபதி முருகன் உள்ளிட்ட 12 கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்னர், சுவாமி, அம்மன் உள்ளிட்டோருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் ஆர். காமராஜ், எம்எல்ஏக்கள் எம். ரெங்கசாமி, இரா. துரைக்கண்ணு, ஒன்றியக் குழுத் தலைவர் சூரியநாராயணன், உதவி ஆணையர் (ஆலங்குடி கோயில்) காத்தையன், உதவி ஆணையர், கோவில் தக்கார் செ.சிவராம்குமார், கூடுதல் ஆணையர் (திருப்பணிகள்) மா. கவிதா, கோயில் செயல் அலுவலர் தை. ஜெயபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.