Enable Javscript for better performance
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்குமாறு வேளாண் துறை அழைப்புவிடுத்துள்ளது.
    இதுகுறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் (பொ) நவீன்சேவியர் வெளியிட்ட அறிக்கை:
    நிகழாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் பசல் பீமா யோஜனா என்ற புதிய பயிர் காப்பீட்டு திட்டமானது கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டங்களை விட அதிக நன்மைகள் கொண்டது.
    இத்திட்டத்தில் வறட்சி அல்லது தண்ணீர் பற்றாக்குறை அல்லது இயற்கை இடர்பாடுகள் காரணமாக விதைப்பு தவிர்க்கப்படும் போதும், பயிர் சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலையிலும் பயிர் காப்பீடு செய்யலாம்.
    மேலும், பயிர் சாகுபடி செய்த பிறகு இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு அல்லது இழப்புகளுக்கும் நிவாரணம் பெறலாம்.
    இதுவரை பிர்க்கா அளவில் மட்டுமே நெல் சம்பா மற்றும் தாளடி, உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து வந்த நிலையில், நிகழாண்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய காப்பீட்டுத் திட்டத்தில் வருவாய் கிராம அளவில் பயிர் காப்பீடு செய்யவும் இதன்மூலம் வருவாய் கிராமத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயனடையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளுக்கும் நிவாரணம் பெற இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பயிர் கடன் பெற்றவர்கள், பெறாதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான பிரிமியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இத்திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் ஏக்கருக்கு ரூ. 375 மட்டுமே. அதாவது காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரத்தில் 1.5 சதவிகிதம் மட்டுமே
    பிரிமியமாகச் செலுத்த வேண்டும்.
    எனவே, மதுக்கூர் வட்டார விவசாயிகள் சம்பா, தாளடி நெல் பயிருக்கு கடைசி நாளான நவம்பர் 30-ம் தேதிக்குள் அருகேயுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது வணிக வங்கிகளில் பிரிமியத்தைச் செலுத்தி இத்திட்டத்தின் பயன்களை முழுமையாகப் பெற்று பயனடையலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai