Enable Javscript for better performance
"பெரியார் - ராஜாஜி இடையே கருத்துகள் முரண்பட்டாலும் நெருங்கிய நட்பு இருந்தது'- Dinamani

சுடச்சுட

    

    "பெரியார் - ராஜாஜி இடையே கருத்துகள் முரண்பட்டாலும் நெருங்கிய நட்பு இருந்தது'

    By தஞ்சாவூர்  |   Published on : 15th October 2016 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தந்தை பெரியார் - மூதறிஞர் ராஜாஜி இடையே கருத்துகள் முரண்பட்டாலும், அவர்களிடையே நெருங்கிய நட்பு இருந்தது என்றார் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தி, ராஜாஜியின் பேரனுமான கோபால் கிருஷ்ணகாந்தி.

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
    தந்தை பெரியார் - மூதறிஞர் ராஜாஜி இடையே கருத்துகள் முரண்பட்டாலும், அவர்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது. அவர்களுடைய தனிப்பட்ட நட்பில் கருத்து வேறுபாடுகள் குறுக்கிட்டதில்லை. இருவருக்கும் இடையே மிகப் பெரிய சமநிலை இருந்தது. பரஸ்பர மதிப்பு இருந்ததால், அவர்களிடையே அந்த சமநிலை காணப்பட்டது.

    கருத்துகளில் முரண்பட்டாலும், தனிப்பட்ட உறவில் பாதிப்பு ஏற்படாதவாறு எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை பெரியார், ராஜாஜியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதுபோன்ற அரசியல் தலைவர்களை இப்போது காண முடியவில்லை. இப்போதைய அரசியல் உறவே மாறிவிட்டது.

    தலைவர்களைத் தேடி மாணவர்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை. மாணவர்களே தலைவர்களாக உருவாக வேண்டும். இதற்கு பெரியார், ராஜாஜியை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

    மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு பெயரில் மத்திய அரசு சர்வதேச விருதுகளை வழங்குகிறது. அதுபோல, தந்தை பெரியாரின் பெயரில் அரசோ அல்லது ஏதாவதொரு அமைப்போ பெரியார் விருதுகளை வழங்க முன் வர வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து சமூக நீதியை ஏற்படுத்துபவருக்கும், கலை வடிவத்தில் சம வாய்ப்புகளைப் பெற்ற உலகத்தை உருவாக்குபவருக்கும், எதிர்கால அறிவியலுக்காகப் பாடுபடுபவர்களுக்கும் என 3 பிரிவுகளில் இவ்விருதுகள் இருக்க வேண்டும் என்றார் கோபால்கிருஷ்ண காந்தி.

    நர்த்தகி நட்ராஜுக்கு முனைவர் பட்டம்: விழாவில் கலைமாமணி விருது, மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருதைப் பெற்றவரும், பரதநாட்டியக் கலைஞருமான நர்த்தகி நட்ராஜுக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தைப் பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி வழங்கினார். வீரமணி பேசுகையில், பாலினம் என்பது சாதனைக்கு ஒரு தடையல்ல என்பதற்கு முன்மாதிரியானவர் நர்த்தகி நடராஜ். எதைப் பற்றியும் கவலைப்பட்டு ஒதுங்காமல், சாதித்த தன்னம்பிக்கையாளர்.  மேலும், பரதக்கலை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கும், அதுவும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டுமே சொந்தமானது என்பதை முறியடித்து, தானும் ஆடி பலரையும் ஆட வைத்த சாதனையாளரான கலைஞர் அவர். இதன் அடிப்படையில் நர்த்தகி நட்ராஜுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதில் இப்பல்கலைக்கழகம் பெருமை கொள்கிறது என்றார்.

    பின்னர், 945 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன், பதிவாளர் ச. ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai