பல மொழி பேசும் இந்தியா போன்ற நாட்டில் மொழி பெயர்ப்பு அவசியம் என்றார் மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கக ஆங்கிலத் துறை தலைவர் எஸ். காமராஜ்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் மொழி பெயர்ப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ.எம். உதுமான் முகைதீன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை காமராசர் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்கக ஆங்கிலத் துறை தலைவர் எஸ். கனகராஜ் பேசியது:
மொழி பெயர்ப்புப் பணி என்பது அறிவியல் ஆய்வுப் பணி. இதை முறையாக கற்பதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும். பல மொழிகள் பேசும் இந்தியாவில் மொழி பெயர்ப்பு என்பது அவசிய தேவை. அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் மொழி பெயர்ப்பு அவசியமாகிறது. மற்றவரின் கருத்துகள், சிந்தனைகளை பரிச்சயமான மொழியில் புரிந்து கொள்ள மொழி பெயர்ப்பு உதவுகிறது.
அதனால்தான் தேசிய அறிவுசார் கழகம், தில்லியில் தேசிய மொழி பெயர்ப்பு ஆணையத்தை ஏற்படுத்தியதுடன், மைசூரில் உள்ள மத்திய அரசின் மொழிகள் பள்ளி நிறுவனத்தின் மூலம் மொழி பெயர்ப்பியலை ஊக்கப்படுத்தி வருகிறது என்றார்.
பேராசிரியர் பார்த்திபன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.