பாபநாசம் வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அய்யம்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட நேரு நகரில் தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், பசுபதிகோவில் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் 2வது தெருவில் கழிவு நீர் வெளியேற்றப்படுவது குறித்தும், பேருந்து பயணிகள் நிறுத்தத்தில் நிழற்குடை உள்ளிட்ட இடங்களில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பேருந்துநிறுத்த நிழற்குடையின் உட்புறம் அதிக அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. அந்த போஸ்டர்களை உடனடியாக அகற்றி, குப்பைகள் இல்லாமலும், கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் இல்லாமல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பராமரிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பாபநாசத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பாபநாசம் வட்ட கிடங்கிலிருந்து அங்காடி விநியோகத்திற்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை லாரியில் ஏற்றப்படுவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது, மூட்டைகளில் எடை குறைபாடுகள் காணப்பட்டதால் சம்பந்தப்பட்ட லோடு மேன் மேலாளரை தாற்காலிக பணி நீக்கம் செய்தும், மேலும் கிடங்கு பொறுப்பாளர், கிடங்கு பில் கிளார்க் உள்ளிட்ட 2 பேரை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இளங்கோவன், பாபநாசம் வட்டாட்சியர் க. ராணி, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் நா. மனோகரன், மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.