பட்டுக்கோட்டை, மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் மற்றும் மழைத் தூவுவான் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் பேசியது:
நிகழாண்டில் கடும் வறட்சியிலிருந்து பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தெளிப்பு நீர் மற்றும் மழைத் தூவுவான் கருவிகளையும், வரும் காலங்களில் தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடித்து விவசாயம் செய்ய சொட்டு நீர் பாசனக் கருவிகளையும் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பொன்னவராயன்கோட்டை, கழுகுப்புலிக்காடு, அணைக்காடு, புதுக்கோட்டை உள்ளுர், ஆலடிக்குமுளை, தாமரங்கோட்டை, முதல்சேரி மற்றும் மதுக்கூர் வட்டாரத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் மேற்கண்ட கருவிகள் வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.சுப்பிரமணியன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சுப.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர், மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) நவீன் சேவியர், வேளாண்மை அலுவலர்கள் எஸ்.மாலதி, ஆர்.சாருமதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.