தஞ்சாவூரில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று புதன்கிழமை தாமதமாக வந்த பேருந்து தொழிலாளர்களுக்குப் பணி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதால்
மாவட்டத்தில் வழக்கம்போல புதன்கிழமை அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் உள்ள போக்குவரத்துக் கழகத்தின் நகரக் கிளைக்குத் தொழிலாளர்கள் புதன்கிழமை காலை பணிக்குச் சென்றனர். ஆனால், கால தாமதமாகச் சென்ற சுமார் 30 பேருக்குப் பணி வழங்க மறுக்கப்பட்டது.
இதைக் கண்டித்து தஞ்சாவூர் கரந்தையில் உள்ள புறநகரக் கிளை முன் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கால தாமதமாகப் பணிக்குச் சென்ற தொழிலாளர்களைக் கிளை நிர்வாகம் மிரட்டி பணி கொடுக்காமல் திருப்பி அனுப்பியதைக் கண்டித்தும், இந்தத் தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்க வலியுறுத்தியும், போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இருந்த வழித்தடத்தை மாற்றி வேறு வழித்தடத்துக்கு மாற்றப்படும் என மிரட்டப்படுவது, நிரந்தரத் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி வழங்கப்படுவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொமுச அன்பரசு, சிஐடியு முருகன், ஏஐடியுசி மதிவாணன், ஐஎன்டியுசி தமாகா சந்திரசேகரன், ஐஎன்டியுசி வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.