காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, தஞ்சாவூர் அருகே காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 3ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன் வடிவைத் திரும்பப் பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும். மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசுப் புதிய அணைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை தொடங்கினர்.
மூன்றாவது நாளாக புதன்கிழமை காலை தஞ்சாவூர் அருகே கத்திரிநத்தம் ரயில்வே கேட் பகுதியில் வந்த எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயிலை 20 நிமிடங்கள் மறித்து முழக்கங்களை எழுப்பினர்.காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன், திரைப்பட இயக்குநர் கெளதமன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டச் செயலர் ச. சிமியோன் சேவியர்ராஜ், உழவர் உரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சீ. தங்கராசு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைக் குழு உறுப்பினர்கள் பழ. ராசேந்திரன், நா. வைகறை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 3 பெண்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 4 நாள்களுக்கு ரயில் மறியல் போராட்டம்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மணிமொழியன் தெரிவித்தது: காவிரியில் முறையாக தண்ணீர் திறந்துவிடாத காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக குறுவை, சம்பா, தாளடி ஆகியவற்றை இழந்தோம். வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கும் விவசாயிகளின் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி கண்காணிப்புக் குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். இந்நிலையில், மத்திய அரசு ஓற்றைத் தீர்ப்பாயத்தை அமைப்பதற்காகச் சட்ட முன் வடிவைக் கொண்டு வந்துள்ளது. இதை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைத்து விவசாயிகள் பெற்ற கடன்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும். காவிரி பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதுவரை 3 நாட்கள் போராட்டம் நடத்தியுள்ளோம். மேலும் 4 நாள்களுக்கு ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.