மழை வேண்டி சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், திருநாகேஸ்வரம் கோயில்களில் புதன்கிழமை ஜெபவேள்வி, யாகம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்பில் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் உள்ள சுந்தரேஸ்வரசுவாமி சன்னதி முன் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் 14 சிவாச்சாரியார்கள் சுவாமிக்கு 108 திரவியங்களால் 16 வகை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பர்ஜன்ய சாந்தி வருணஜெப வேள்வி, நந்தியின் கழுத்துவரை நீரை நிரப்பி வழிபட்டனர். ஓதுவார்கள் மழை வேண்டி பாடினர். கோயில் வித்வான்கள் இசை வாத்தியங்களால் மழைக்கான ராகங்களை இசைத்தனர். அப்போது சுந்தரேஸ்வரருக்கு சீதளகும்பம் எனப்படும் தாரா பாத்திர நீரை விழச்செய்து வழிபட்டனர். மேலும் மகாருத்ர அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, வெள்ளை விநாயகர் கோயில் என்னும் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் சுவாமி கோயிலில் கபர்தீஸ்வரன் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வருணயாகம் உள்ளிட்ட பூஜைகளை நடத்தினர்.
திருநாகேஸ்வரம் கோயிலில்.... கும்பகோணம் அருகே ராகு தலம் எனப்படும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை மழைவேண்டி சிறப்பு யாகம், மூலவர் நாகநாத சுவாமிக்கு ருத்ரா அபிஷேகம், தாரா பாத்திரம் கொண்டு நீர் விழச்செய்தல், நந்தி பகவானுக்கு நீர் தொட்டி அமைத்து சிறப்பு வழிபாடு, தேவாரம் ஓதுதல், இசை வாத்தியங்களைக் கொண்டு மழை பொழிவதற்கான ராகங்களை வாசித்தல், பக்தர்களுக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிகளில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, மயிலாடுதுறை மக்களவை தொகுதி உறுப்பினர் பாரதிமோகன், தஞ்சாவூர் எம்எல்ஏ ரெங்கசாமி, கும்பகோணம் ஒன்றியச் செயலர் சோழபுரம் கா. அறிவழகன்,கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தயாளன், அறநிலையத்துறையின் கும்பகோணம் உதவி ஆணையர் ஞானசேகரன் உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.