கடன் நிலுவைக்காக  பயிர் காப்பீட்டுத் தொகையை வரவு வைக்கக் கூடாது

விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் நிலுவைக்காக வரவு வைக்கக் கூடாது
Published on
Updated on
1 min read

விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் நிலுவைக்காக வரவு வைக்கக் கூடாது என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது:
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2.96 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 403 கோடி இழப்பீடு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2015-16 ஆம் ஆண்டில் இப்பயிர் காப்பீடு பதிவு செய்யப்பட்டது. அதற்கான பிரிமியத்தில் மாநில அரசின் பங்களிப்பு 50 சதவீதம். இதன்படி ரூ. 51.46 கோடி செலுத்தப்பட்டது. இதன்மூலம், 2015-16 ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு இந்த இழப்பீட்டுத் தொகை கிடைக்கிறது. இந்தத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளின் கணக்கில் வரவு வைப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்க வேண்டும்.
ஆனால், அதற்கு மாறாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதுபோன்ற இழப்பீட்டுத் தொகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்ட ஊதியம் உள்ளிட்டவற்றை பயனாளிகளின் ஒப்புதல் இல்லாமலே, அவர்களுக்குத் தகவலும் அளிக்காமலே கடன் நிலுவைக்காக தாமாகவே வரவு வைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. இதுபோன்று செய்யக் கூடாது.
வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகள் தாங்களே எடுத்துக் கொள்கிற உரிமை அவர்களுக்கு அளிக்கப்படுகிறதா என்பதை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், மாநில அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்குக் கிடைக்கும் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விதிகளுக்குப் புறம்பாக வங்கிகள் தாமாக எடுத்துக் கொள்வதை ரிசர்வ் வங்கியும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக வேளாண்மைத் துறை அமைச்சர், செயலரிடம் வலியுறுத்தி உள்ளோம் என விமல்நாதன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com