தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர்களைத் துணைவேந்தர் க. பாஸ்கரன்பாராட்டி பட்டயம் வழங்கினார்.
இந்த விழாவுக்குத் தலைமை வகித்த துணைவேந்தர் பேசியது:
யுனெஸ்கோ நிறுவனம் அக். 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக அறிவித்தது. ஆனால், இந்தியாவில் மிகப் பெரிய தத்துவஞானியாகவும், சிறந்த கல்வியாளராகவும் இருந்து கல்வியை ஊக்கப்படுத்திய பெருமகனார் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் செப். 5-ம் தேதி. அதனால், அரசு அந்நாளை ஆசிரியர் தினமாக 1962 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
தமிழக ஆளுநரின் திட்டத்தை விரிவுபடுத்தி தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு ஆசிரியருக்கு ஒரு மரம், ஒரு பணியாளருக்கு ஒரு மரம், ஒரு மாணவருக்கு ஒரு மரம் என ஒவ்வொரு புலத்தின் அருகில் நடப்பட்டு வருகிறது என்றார் துணைவேந்தர்.
விழாவில் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பழ. பிரகதீசு, திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் அ. மகேஸ்வரி, குருங்களூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் சா. அமுசவல்லி, திருமலைசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் க. மணிமொழி ஆகியோரை துணைவேந்தர் பாராட்டி பட்டயம் வழங்கினார்.
விழாவில் பதிவாளர் ச. முத்துக்குமார், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் சி. ராசேந்திரன், முனைவர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.