தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளன.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது-
மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் (அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற் கூடங்கள்) ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு கல்லூரியிலிருந்து ஒரு மாணவர் வீதம் அனுப்பப்பட வேண்டும்.
போட்டிகளுக்கான தலைப்புகள் பங்கேற்கும் மாணவர்களுக்குப் போட்டி நடைபெறும் நேரத்தில் தெரிவிக்கப்படும். போட்டிகளுக்கான தலைப்புகள் பெரும்பாலும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் குறித்த வகையில் அமையும். போட்டி முடிவுகள் போட்டி நடைபெறும் நாளன்றே தெரிவிக்கப்படும். போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முறையே முதல் பரிசு - ரூ. 10,000-ம், இரண்டாம் பரிசு ரூ. 7,000-ம், மூன்றாம் பரிசு ரூ. 5,000-ம் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பல்கலைக்கழகம், கல்லூரியிலிருந்து முதல்வர் மற்றும் துறைத் தலைவர் அனுமதிக் கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
இப்போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் அறிய விரும்புவோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். தொலைபேசி எண் : 04362 - 271530.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.