தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் தொடர்ந்து ஆறாவது நாளாக வியாழக்கிழமை கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு மாணவர் இயக்கப் பொதுச் செயலர் பிரபாகரன், தமிழக மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன், தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதி ஜான் வின்சென்ட், அஜீத், அப்பாஸ், ராஜி, நவீன் ஆகியோர் தலைமை வகித்தனர். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அ. நல்லதுரை, ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில்...
கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, அரசு மகளிர் கல்லூரி மாணவிகளும் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்னா போராட்டம் மேற்கொண்டனர்.
சாலை மறியல்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாகச் சென்று கும்பகோணம் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்குச் சங்க நிர்வாகி தமிழினியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், செயலர் அருளரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அதிராம்பட்டினத்தில்...
அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈசிஆர் சாலை கல்லூரி முக்கம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர். இவர்களுக்கு ஆதரவாக கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.