புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 235 ஏக்கர் விவசாய நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 235 ஏக்கர் விவசாய நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 235 ஏக்கர் விவசாய நிலம் அருள்மொழிப்பேட்டை கிராமத்தில் உள்ளது. இந்த நிலங்களின் பயிர் சாகுபடி உரிமை அருள்மொழிப்பேட்டை கூட்டுறவு பண்ணைச் சங்கத்திடம் இருந்தது.
இந்தச் சங்கம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி 2003 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இதனால் கோயிலுக்குச் செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி ரூ. 60 லட்சம் நிலுவையில் இருந்து வந்தது.
இதுதொடர்பாக வருவாய் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்றம் அருள்மொழிப்பேட்டை கூட்டுறவுப் பண்ணைச் சங்கம் நிலத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, 235 ஏக்கர் நிலத்தையும் தேவஸ்தான அலுவலர்கள் வியாழக்கிழமை மீட்டனர். காவல் துறைப் பாதுகாப்புடன் நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர், கோவில் பணியாளர்கள் முன்னிலையில் இந்நிலம் மீட்கப்பட்டது.
பின்னர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன் தெரிவித்தது:
இந்த நிலத்தை மீட்டதன் மூலம் கோயிலுக்குச் சேர வேண்டிய நிலுவைத்தொகை ரூ. 60 லட்சம் வசூலாகவும், விவசாயிகளை நேரடி குத்தகைதாரர்களாக மாற்றவும் வழிவகை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
அப்போது கோயில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் சுரேஷ், வழக்கு ஆய்வாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com