"புளூவேல்' விளையாட்டு குறித்து புகார் செய்யலாம்

நீல திமிங்கல (புளூவேல்) விளையாட்டுக் குறித்து காவல் துறைக்குப் புகார் செய்யலாம் என்றார் மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார்.
Updated on
1 min read

நீல திமிங்கல (புளூவேல்) விளையாட்டுக் குறித்து காவல் துறைக்குப் புகார் செய்யலாம் என்றார் மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார்.
தஞ்சாவூர் டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற புளூவேல் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர்  மேலும் பேசியது: திறன்பேசியில் (ஆன்டிராய்டு போன்) அண்மைக் காலமாக ஆபத்து நிறைந்த நீல திமிங்கல விளையாட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதில், முகம் தெரியாத நபர்கள் இந்த விளையாட்டு மூலம் நம்மை ஆட்டுவிக்கின்றனர்.
மாணவர்கள் திறன் பேசியை (ஆன்டிராய்டு போன்) தூக்கிக் கொண்டு தனியாகவோ, மறைவான இடத்துக்கோ சென்றால், அவர்கள் புளூவேல்  விளையாட்டு அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு தவறான வழியில் செல்கின்றனர் என்பதை அறியலாம். இதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
இதேபோல, பள்ளியிலும் தனிமைப்பட்டாலோ அல்லது பள்ளி நேரத்தில் பாதியில் ஏதாவது ஒரு பொய்யான காரணத்தைக் கூறி விடுப்பு எடுத்துச் சென்றாலோ அவர்களை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், பெற்றோரையும் அழைத்து தகவல் அளிக்க வேண்டும். தனிமைப்பட்டு செல்லும் மாணவர் குறித்து ஆசிரியரிடம் சக மாணவர்கள் தகவல் அளிக்க வேண்டும்.
புளூவேல் விளையாட்டுக்கு ஆட்பட்டவர்களின் ரகசியங்களை வெளியிடுவோம் என்ற மிரட்டல்களுக்கு மாணவர்கள் அஞ்சத் தேவையில்லை. நாம் துணிவாக இருந்தால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
அவ்வாறு யாராவது மிரட்டினால் 8300071100 என்ற எண்ணுக்குப் புகார் செய்யலாம். இந்த எண்ணில் பதில் அளித்து உதவி செய்ய 24 மணிநேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் செந்தில்குமார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் சிறப்புரையாற்றினார். தஞ்சாவூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். தமிழ்ச்செல்வன், பள்ளித் தாளாளர் அருள்தந்தை ஜான், நிர்வாகி அருள்தந்தை மான்சிங், முதல்வர் அமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை வழங்க தயார்
செய்தியாளர்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கூறியது: நீல திமிங்கல விளையாட்டைத் தடுப்பதற்காக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுபோன்ற செயலிகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், அதை உடனடியாக நீக்க வேண்டும். நீல திமிங்கல விளையாட்டில் யாராவது மிரட்டினால் புகார் செய்யலாம். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், காவல் துறை, மருத்துவர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com