தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மீனவர்கள் வலையில் மட்டை சிங்கி இறால் மீன்கள் அதிகளவில் கிடைத்தன.
அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதேபோல் அருகிலுள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை அதிராம்பட்டினம் கடைத்தெரு பெரிய மீன் மார்கெட்டுக்கு மீனவர்கள் வலையில் அபூர்வமாக சிக்கும் சிங்கி இறால் மீன்கள் விற்பனைக்கு வந்தன. சுமார் 200 முதல் 250 கிராம் எடை கொண்ட இந்த இறால் மீன்கள் கிலோ ரூ. 200க்கு விற்பனை செய்யப்பட்டது. மருத்துவக் குணம் கொண்டதால் இவற்றை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சிங்கி இறால் மீன்கள் குறித்து மீன் வியாபாரி தாஜுதீன் கூறியது: மீனவர்கள் இவற்றை மட்டை சிங்கி என்று கூறுவர். இவை மீனவர்களின் வலைகளில் மிகக்குறைவாகவே சிக்கும்.
சர்வதேச மார்க்கெட்டில் நல்ல விலை போகக்கூடிய சிங்கி இறால் மீன்கள் கடலில் பாறைகளுக்கு அடியில்தான் வளரும்.
இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் வந்து இரைகளைத் தேடித் தின்னும். இவற்றைப் பிடிப்பதற்காகவே சிங்கி வலை, டிஸ்கோ வலை போன்ற வலைகளும் உள்ளன. இவ்வகை இறால் மீன்கள் அதிக நார்ச்சத்துடன் மிகவும் சுவையாக இருக்கும். இவை அதிகமாக கிடைக்கும்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றார்.