தஞ்சாவூர் எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளாகத்தில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் (லிகாய்) செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர்.
எல்.ஐ.சி. ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 வழங்க வேண்டும். எல்.ஐ.சி. முகவர்களுக்கு உண்மையான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையப் பரிந்துரைப்படி கமிஷன் விகிதங்களை அமல்படுத்த வேண்டும். காலாவதியான பாலிசி புதுப்பித்தல் கால அவகாசத்தை 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும். பாலிசி மீதான ஜி.எஸ்.டி., சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். நேரடி விற்பனை, இணையவழி விற்பனையைக் கைவிட வேண்டும். பணிக்கொடை ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். கணக்கீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் கோட்டத் தலைவர் ஏ. பூவலிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் என். ராஜா தொடக்கவுரையாற்றினார். தஞ்சாவூர் கிழக்குக் கோட்டத் தலைவர் பி. தங்கமணி சிறப்புரையாற்றினார். செயலர் இரா. கருணாநிதி, மேற்குக் கோட்டத் தலைவர் எம். ராஜமாணிக்கம், செயலர் எம். திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.