பட்டுக்கோட்டை வட்டத்தில் கல்லணை கால்வாயிலிருந்து த.வடகாடு வாய்க்கால், ராஜாமடம் தாய் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் விவசாயத்திற்காக கடைமடை வரை தண்ணீர் செல்வதை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளிலுள்ள வாய்க்கால்களிலும், மதுக்கூர் ஒன்றியத்தில் மன்னங்காடு ஊராட்சியிலுள்ள த.வடகாடு வாய்க்காலிலும், புன்னங்குன்று ஊராட்சியில் கிளை வாய்க்காலிலும், பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் ராஜாமடம் தாய் வாய்க்காலிலும் விவசாயத்திற்காக கடைமடை வரை தண்ணீர் செல்வதை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர், வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பொதுப்பணித்துறை கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஒரத்தநாட்டில்... ஒரத்தநாடு வட்டத்தில் கல்லணைக் கால்வாயிலிருந்து கல்யாணஓடை பிரிவு வாய்க்கால் வழியாக குலமங்கலம் வாய்க்காலில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
அப்போது, குலமங்கலம் கால்வாயிலுள்ள தண்ணீர், திறக்கப்பட்டுள்ள அளவு, கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல ஏற்படும் காலம், கால்வாயின் மூலமாக பாசன வசதி பெறும் விவசாய நிலங்களின் பரப்பளவு ஆகியவற்றை பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்த ஆட்சியர், குலமங்கலம் வாய்க்காலிலிருந்து அறுமலை பிரிவு வாய்க்கால் 10 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கால்வாயில் கிடக்கின்ற காய்ந்த செடி கொடிகளை தண்ணீர் வருவதற்கு முன் அகற்றிடவும், தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளவும் பொதுப்பணித் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கல்யாண ஓடையிலிருந்து கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையும், தண்ணீர் திறக்கப்பட்டுள்ள அளவு மற்றும் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களின் பரப்பளவு ஆகியவற்றை கேட்டறிந்து தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுத்திய காய்ந்த சரகுகள் மற்றும் செடிகொடிகளை பொதுப்பணித்துறை அலுவலர்களை கொண்டு உடனடியாக அகற்றிட அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பொதுப்பணித்துறை கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.