கும்பகோணம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நடந்துள்ள முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தலைவர் சின்னதுரை ஆகியோர் கும்பகோணம் உதவி ஆட்சியர் எம். பிரதீப்குமாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவின் விவரம்:
கபிஸ்தலத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியில் விவசாயிகள் வேளாண்மை நகை கடன், பயிர் கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்மைக் காலமாக விவசாயத்தோடு தொடர்பிலாத நபர்களுக்கு விவசாய கடன்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த வங்கிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அலுவலர்கள், வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை திடீரென ஆய்வு செய்த போது வங்கி ஊழியர்கள் போலி நகைகளை விவசாயிகளின் பெயரில் பல கோடி ரூபாய்க்கு வைத்து இருப்பது தெரியவந்துள்ளது. இப்படி விவசாயிகளின் பெயரைக் கூறிரூ.6 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
விவசாய நகைக்கடன் மோசடிக்கு சில வருவாய்த்துறை அலுவலர்கள் போலி சான்றிதழ்கள் தந்திருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த 2006 - 07 ஆம் ஆண்டு மத்திய அரசினால் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன் தள்ளுபடித் திட்ட பயனாளிகள் உள்பட அனைத்து கடன் கணக்குகளையும் மற்றும் தற்போது கடன் பெறுவதற்கு விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும். எனவே, இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு சிபிஐ விசாரணைக்கு வங்கி ஒத்துழைக்கவில்லை என்றால் வங்கியின் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.