தஞ்சாவூர் மாவட்டத்தில்  72 கூட்டுறவு சங்கங்களுக்கு  தேர்தல் முடிவு அறிவிப்பு

உயர் நீதிமன்றம் விதித்த தடை விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் 72 கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் முடிவு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
Published on
Updated on
1 min read

உயர் நீதிமன்றம் விதித்த தடை விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் 72 கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் முடிவு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
மாநிலக் கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதில், முதல் கட்டமாகத் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை 4 நிலைகளாகத் தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் இந்நடவடிக்கைகளை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப். 9-ம் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன.
இத்தடையை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியதைத் தொடர்ந்து, மீண்டும் தேர்தல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதன்படி, இரண்டாம் நிலை தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. 
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 72 சங்கங்களுக்குத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. தவிர, இரு சங்கங்களுக்குத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாலும், ஒரு சங்கத்தில் யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாததாலும், அதன் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை கூட்டுறவுத் துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் 321 சங்கங்களும், பால் வளத் துறையில் 118 சங்கங்களும், மீன் வளத் துறையில் 41 சங்கங்களும், கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் 16 சங்கங்களும், வீட்டு வசதி துறையில் 22 சங்கங்களும், மாவட்ட தொழில் மையத்தில் 14 சங்கங்களும், சமூக நலத் துறையில் 3 சங்கங்களும், கதர் கிராம தொழில் துறையில் 26 சங்கங்களும் என மொத்தம் 561 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.