கும்பகோணத்தில் அஞ்சல் துறை சார்பில் திருச்சி மத்திய மண்டல அளவிலான தபால் தலை கண்காட்சி ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர் துரைசாமி கூறியது: தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் திருச்சி மத்திய மண்டல அளவிலான தபால் தலை கண்காட்சி குடந்தை பெக்ஸ் -2018 என்ற தலைப்பில் கும்பகோணம் மகாமகம் குளம் தெற்கு கரையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கி வரும் 11 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் அரிய வகையிலான தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
தபால்தலை சேகரிப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. அஞ்சல்துறையின் 164 ஆவது ஆண்டில் நடைபெறும் இக்கண்காட்சியில் 240 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக, மதுரையைச் சேர்ந்த ஒருவரின் ரூ. 20 லட்சம் மதிப்பிலான தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இதே போல, கும்பகோணத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கணிதமேதை சீனிவாச ராமானுஜன், நாச்சியார்கோவில் கல்கருடசேவை, அய்யாவாடி பிரத்யங்கிராதேவி கோயில், கும்பேஸ்வரர்கோயில் கல் நாதஸ்வரம், சுவாமிமலை பாரம்பரிய சோழர்கால சிலை வடிவமைப்பு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, கும்பகோணம் டிகிரி காபி, திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் ஆகியவற்றின் படங்களைக் கொண்ட புதிய தபால் உறைகள் வெளியிடப்பட உள்ளது என்றார் அவர்.