வாய்க்கால்கள், ஏரிகளில் தூர்வாரும் பணியை அரசுச் செய்யத் தவறிவிட்டது என்றார் பாஜக மாநிலச் செயலர் கரு. நாகராஜன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பாஜக மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும், கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் செல்லவில்லை. இதற்கு வாய்க்கால்கள், ஏரிகளில் தூர் வாரப்படாததே காரணம். இதைச் செய்வதற்கு கடந்த காலத்தில் திமுகவும், இப்போதைய அரசும் தவறிவிட்டன.
காவிரியில் தமிழக விவசாயிகள், மக்களின் உரிமையை திமுக - காங்கிரஸ் அரசு நிலை நாட்டாமல் இருந்து வந்த நிலையில், மோடி அரசுதான் நிலை நாட்டியது. இந்நிலையில், கடைமடைக்குத் தண்ணீர் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
சொத்து வரியை 1998 ஆம் ஆண்டு முதல் சீர் செய்யப்படாமல் இருந்த நிலையில் இப்போது திடீரென 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமையக அறிவிப்பின்படி, இப்போது பூத் அளவிலான குழுக்களை அமைப்பது, அங்குள்ள மக்களை ஒருங்கிணைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜக தலைவர் அமித்ஷா வழிகாட்டுதல்படி 23 விதமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், அப்பகுதி மக்களுக்காக அறப்போராட்டம் நடத்துவது, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகப் பாடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளோம் என்றார் நாகராஜன்.