தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவின் நிறைவு நாளையொட்டி தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்.12ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் புறப்பாடு நடைபெற்று வந்தது. இதில், 15ஆம் திருநாளான ஏப். 26ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நடராசர் ராஜ வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், சிவகங்கைப் பூங்காவில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், தஞ்சாவூர்அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா பான்ஸ்லே, கோயில் செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் கொடியிறக்கப்பட்டதைத் தொடர்ந்து சித்திரைப் பெருவிழா நிறைவுற்றது.
இதனிடையே, தீர்த்தவாரிக்கு சிவகங்கைப் பூங்கா அருகில் உள்ள கிறிஸ்து ஆலயம் வழியாகச் செல்ல வேண்டும். அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றதால், மேள, தாள முழக்கத்துடன் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சலசலப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மேற்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலயத்தில் சிறப்பு வழிபாடு முடிவடைந்ததையடுத்து, மேள, தாள முழக்கத்துடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.
கும்பகோணத்தில்... கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.
பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மந்திரபீடேஸ்வரியாகிய மங்களாம்பிகையுடன் ஆதிகும்பேசுவரசுவாமி மகாமககுளத்தில் தீர்த்தவாரி கண்டருளினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து திங்கள்கிழமை (ஏப்.30) இரவு அலங்கரிக்கப்பட்ட சப்தஸ்தானப் பல்லக்குகளில் விநாயகர், மங்களாம்பிகையுடன் ஆதிகும்பேசுவரசுவாமி எழுந்தருளி, சப்தஸ்தான திருத்தலங்களான கும்பகோணம், சாக்கோட்டை, தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருக்கொட்டையூர், மேலக்காவிரி ஆகிய 7 ஊர்களுக்கு சென்று விட்டு, மே 2 ஆம் தேதி ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு வந்தடைகிறார்.
அன்றிரவு ஆதிகும்பேஸ்வர் கோயில் வடக்கு வீதியில் சப்தஸ்தான பல்லக்கில் உள்ள சுவாமிக்கு , பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் கவிதா, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.