தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,402 வழக்குகளில் ரூ.10.92 கோடிக்கு தீர்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,402 வழக்குகளில் ரூ. 10.92 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,402 வழக்குகளில் ரூ. 10.92 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலமாக உரிமையியல், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 10,941 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 2,295 வழக்குகளுக்கு ரூ. 9 கோடியே 84 லட்சத்து 86 ஆயிரத்து 159-க்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இவற்றில் விபத்து இழப்பீடு தொடர்பாக 1,200 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 295 வழக்குகளில் ரூ. 6 கோடியே 67 லட்சத்து 59 ஆயிரத்து 535-க்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வராக்கடன் தொகைக்கான 4,279 கணக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில், 107 வழக்குகளுக்கு ரூ. ஒரு கோடியே 8 லட்சத்து 5 ஆயிரத்து 926-க்கு தீர்வு காணப்பட்டது.
இதேபோல, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய ஊர்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. பாபநாசத்தில்
168 வழக்குகளுக்குத் தீர்வு காணப் பட்டது.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2,402 வழக்குகள் முடிவு செய்யப்பட்டு, ரூ. 10 கோடியே 92 லட்சத்து 92 ஆயிரத்து 85-க்கு தீர்வு காணப்பட்டது.
முன்னதாக, இந்தத் தேசிய மக்கள் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி தொடங்கி வைத்தார். அப்போது, வாகன விபத்தில் பாதிக்கப்பட்டு நினைவிழந்த மனுதாரருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. ஒரு கோடிக்குக் காப்பீட்டு நிறுவனம் மனுதாரரின் வங்கிக் கணக்கில் செலுத்திய ஆவணத்தை அவரது வழக்குரைஞரிடம் நீதிபதி சேஷசாயி வழங்கினார்.
முதன்மை மாவட்ட நீதிபதி வி. சிவஞானம், கூடுதல் மாவட்ட நீதிபதி டி. பாலகிருஷ்ணன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கே. பூர்ண ஜெய ஆனந்த், முதன்மை சார்பு நீதிபதி ஜி. சுந்தர்ராஜன், சிறப்பு சார்பு நீதிபதி ஏ. மலர்விழி, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் எஸ். விஜயஅழகிரி, எஸ். நளினக்குமார், எஸ். தங்கமணி, ஜெ. நாகலட்சுமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர். மனோகரன், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான பி. சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com