மந்தமான சீரமைப்புப் பணி; தொடரும் போராட்டங்கள்

பட்டுக்கோட்டை வட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் 20 நாள்களுக்கு மேலாகியும் மின்சாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை


பட்டுக்கோட்டை வட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் 20 நாள்களுக்கு மேலாகியும் மின்சாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் செய்து தரப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்துள்ள பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபடுவதும், அதிகாரிகள் சமரசப் பேச்சு நடத்துவதும் தொடர்கிறது. மேலும் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தவிர வேறு எந்தப் பலனும் இருப்பதாக தெரியவில்லை.
தொடக்கத்தில் துரிதமாக நடைபெற்ற சீரமைப்புப் பணிகளும் தற்போது மந்தமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் இயல்பு நிலை திரும்பும் என அரசு தரப்பில் கூறப்படுவதை மக்கள் நம்பவில்லை. அதனால் பட்டுக்கோட்டை பகுதியில் தினமும் கிராம மக்களின் சாலை மறியல் போராட்டம் தொடர்கிறது.
மேடையக்கொல்லையில்... பட்டுக்கோட்டை அருகே மேடையக்கொல்லை கிராம மக்கள் மின் விநியோகம், புயல் நிவாரணம் கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் வழித் தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சு நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இடையாத்தியில்... பட்டுக்கோட்டை வட்டம், இடையாத்தி கிராமத்தில் மின்சாரம், குடிநீர் வழங்கக் கோரியும், பசுக்காரன் தெருவில் புயலில் சாய்ந்துள்ள மின் கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின் கம்பங்கள் நடவும், கொடிமரம் பேருந்து நிறுத்தத்தில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் சாக்கடை கழிவு நீரை அகற்றவும் வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை சுமார் 1 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் பட்டுக்கோட்டை-புதுக்கோட்டை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மின் வாரிய அதிகாரிகள், போலீஸார் பேச்சு நடத்தி, ஓரிரு நாளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
திட்டக்குடியில்... பட்டுக்கோட்டை-மன்னார்குடி பிரதான சாலையில் உள்ள திட்டக்குடி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய சாலை மறியலால் அவ்வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்சாரம், குடிநீர் கோரியும், புயலால் சேதமடைந்த மாடி வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவும், புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அரசே வெட்டி அகற்றவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கவும் வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது. அப்போது அங்கு சென்ற அதிகாரிகள் 1 வாரத்தில் புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் என உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com