Enable Javscript for better performance
ஆம்பலாப்பட்டில் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பலாப்பட்டில் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

    By DIN  |   Published on : 09th February 2018 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காட்டில் வியாழக்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கௌதமன் ஆய்வு மேற்கொண்டார்.
    ஆம்பலாப்பட்டு தெற்குகுடிகாட்டில் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பிரிவினர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு அரசியல் கட்சியினர் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
    இந்நிலையில், வியாழக்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கெளதமன் மற்றும் மாநில பொருளாளர் கல்யாணசுந்தரம், மாநில துணைத் தலைவர் மணிவண்ணன், மாவட்ட தலைவர் அரங்கநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் இன்பரசன், பேராவூரணி சட்டமன்ற தொகுதி செயலாளர் சசிகுமார் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டனர். அப்போது, 'எங்களுக்கு சுமார் ரூ. 15 லட்சம் வரையிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீஸார் முழுமையாக கைது செய்யவில்லை. எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்' என பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
    பின்னர் பேசிய ராம்ஜி கெளதமன், இந்த சம்பவத்தில் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்காத காவல் துறை மற்றும் ஆட்சியரை வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் உடனடியாக அனுப்பப்படும். இதுபோல் நாட்டில் வேறெங்கும் நடைபெற கூடாது என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai