Enable Javscript for better performance
கூட்டுக் குடிநீர்த் திட்டம்: கொள்ளிடத்தில் தண்ணீர் எடுப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுக் குடிநீர்த் திட்டம்: கொள்ளிடத்தில் தண்ணீர் எடுப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பூதலூர் வட்டத்துக்கு உள்பட்ட செங்கரையூர் பாலம் அருகேயுள்ள மகிமைபுரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர்.
    பூதலூர் அருகேயுள்ள அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நீரேற்று நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து அதிக சக்தியுள்ள மின் மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், முப்போகம் விளையும் இப்பகுதியில் ஓராண்டாக விவசாயம் நின்றுவிட்டது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் 150 அடிக்கும் ஆழமாகச் சென்றுவிட்டது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
    இந்நிலையில், இப்பகுதியில் ஆறாவது ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சிக்கப்படுகிறது. இக்கிணறு அமைக்கப்பட்டால் அலமேலுபுரம் பூண்டி, நாகாச்சி, விஷ்ணம்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட சுமார் 10 கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிடும். எனவே, அலமேலுபுரம் பூண்டி - நாகாச்சி இடையே கிணறு அமைக்கப்படுவதைக் கைவிட்டு, வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் வெ. ஜீவகுமார், விவசாயிகள் திருநாவுக்கரசு, கோவிந்தராசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் காந்தி, முருகேசன், பூண்டி மாதா பேராலயப் பங்குத் தந்தை பாக்கியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் வெ. ஜீவகுமார் தெரிவித்தது:
    பரிசல் துறையாக விளங்கிய இப்பகுதியில் இப்போது தண்ணீர் வரத்து என்பதே இல்லாமல் போய்விட்டது. முன்பு மணல் சுரண்டப்பட்டு வந்த நிலையில் இப்போது, தண்ணீரும் சுரண்டப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியில் விவசாயம், குடிநீர் ஆதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சாமல், வேறு இடத்தில் தண்ணீர் எடுக்கவேண்டும். இதுகுறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தண்ணீர் எடுப்பது தொடர்ந்தால் மேலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai