Enable Javscript for better performance
தென்னையைத் தாக்கும் புது வகை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    தென்னையைத் தாக்கும் புது வகை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

    By DIN  |   Published on : 09th February 2018 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்னையைத் தாக்கும் புதுவகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறை இணை இயக்குநர் அ. மதியழகன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களானது தென்னை இலைகளின் கீழ் பரப்பில் சுருள் சுருளாக முட்டைகளை ஈன்று வைத்திருக்கும். முட்டைகள் அடர்ந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும். இவற்றின் உடலில் இருந்து சுரக்கும் ஒரு வகை தேன் போன்ற இனிப்பு திரவத்தால் கரும்பூசணம் பெருமளவில் அதன் மேல் வளர்ந்து பயிர் பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால், ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு பயிர் வளர்ச்சி பெருமளவில் குன்றிவிடும். இப்பூச்சிகளால் இலைகளில் சாறு உறிஞ்சப்பட்டு இலைகள் மஞ்சள் நிறமடைவதுடன் நாளடைவில் காய்ந்து சருகாக மாறிவிடும். பூச்சித் தாக்குதலின் தொடக்க நிலையிலேயே மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 7 முதல் 10 என்ற அளவில் பயன்படுத்தி, பூச்சிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம்.
    இப்பூச்சிகளின் நடமாட்டம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகமாக இருப்பதால், ஏக்கருக்கு 2 விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இலைகளின் கீழ்பகுதியில் காணப்படும் முட்டைகள் இளம்பருவ மற்றும் முதிர்ந்த பூச்சிகளை விசைத்தெளிப்பான் மற்றும் ராக்கர் ஸ்பிரேயர் கொண்டு தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்து பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
    இப்பூச்சி தாக்குதலால் ஏற்படும் கரும்பூஞ்சாண வளர்ச்சியை அகற்ற லிட்டருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவு பசையைத் தண்ணீரில் கரைத்து இலைகளின் மேல் பகுதி நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் தாவரப் பூச்சி விரட்டியான 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல், 10 சதவீத வேப்ப இலை கரைசல், 0.5 சதவீத வேப்ப எண்ணெய் கரைசல், மீன் எண்ணெய் சோப்பு கரைசல், மூலிகை பூச்சி விரட்டி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai