Enable Javscript for better performance
தஞ்சையில் தரையில் படுத்து விவசாயிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் மேடை முன் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் நடத்தினர்.
    இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பே விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன், பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன், திமுக விவசாய அணி தெற்கு மாவட்டத் துணை அமைப்பாளர் தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ், உழவர் உரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சீ. தங்கராசு உள்பட சுமார் 15 விவசாயிகள் தரையில் படுத்தனர்.
    கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அரசு அமைக்க வேண்டும். அதற்கு மோடி அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். டெல்டா விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். காவிரியில் கர்நாடக அரசுத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
    பின்னர், போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, சில விவசாயிகள் எழுந்து இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து தரையில் படுத்து போராட்டம் நடத்திய கக்கரை சுகுமாரன் உள்ளிட்டோரை போலீஸார் வெளியே அழைத்துச் சென்றனர்.
    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவக்குடி டி. முருகேசன் பேசியது:
    சுவாமிமலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா இருப்பு இல்லை. இதேபோல, ஜிப்சம், ஜிங்க் சல்பேட்டும் இல்லை. இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
    தளவாய்ப்பாளையம் ரெங்கராஜ்: நெய்வாசல் தென்பாதி வாய்க்காலில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதேபோல குளமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. வாய்க்காலையும், குளத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களில் உள்ள கண்ணன் ஆறு, மகாராஜாசமுத்திரம், அக்னியாறு ஆகிய காட்டாறுகளில் அதிக அளவில் மணல் திருட்டு நிகழ்கிறது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள கூடலிவயல் கிராமத்தில் உள்ள மணல் திட்டுகளில் இருந்து சில சமூக விரோதிகள் கனரக இயந்திரங்கள் மூலம் மணலை திருடிச் செல்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பள்ளத்தூர் கே.ஏ. கூத்தலிங்கம்: சம்பா சாகுடியில் பள்ளத்தூர் கிராமத்தில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் 50 முதல் 100 சதவீதம் வரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    தென்னங்குடி பழனிமாணிக்கம்: கள்ளப்பெரம்பூர் ஏரி 640 ஏக்கர் பரப்பளவு உடையது. இதை நம்பி பல கிராமங்கள் உள்ளன. எனவே, இதை தூர் வாரிக் கொடுக்க வேண்டும்.
    அம்மையரகம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரை மத்திய அரசுப் படிப்படியாகக் குறைத்து வருகிறது. தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் அனைவரும் ஒரே அணியில் திரண்டு போராட வேண்டும். தமிழக முதல்வர் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசை எதிர்த்து போராட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai