Enable Javscript for better performance
தில்லி போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளிடம் ஆதரவு கேட்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளிடம் ஆதரவு கேட்பு

    By DIN  |   Published on : 24th March 2018 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தில்லியில் மார்ச் 26-ம் தேதி முதல் நடைபெறவுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்டுள்ளோம் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.
    தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தது:
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தில்லி நாடாளுமன்றம் முன் மார்ச் 26-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். இதில் பங்கேற்க அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் ஆதரவு கேட்டுள்ளோம். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து, பங்கேற்பதாகக் கூறியுள்ளனர்.
    காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முடக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்திய நீர் வளத் துறைச் செயலரின் நடவடிக்கை முற்றிலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கும் விதமாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக இருக்கிறது.
    நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 15 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்தை மத்திய அரசு மதிக்காததுடன், அப்போராட்டத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. பிரதமர் மோடி தன் அரசு மீது கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இக்கூட்டத்தில் இறுதி வரை கொண்டு வர முடியாத நிலையை ஏற்படுத்துவதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்துகிறார். இது, எட்டு கோடி தமிழர்களின் பிரதிநிதிகளாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேலிக்கூத்தாக்கும் விதமாக உள்ளது என்றார் பாண்டியன்.
    ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் துணைத் தலைவர் அண்ணாதுரை, துணைச் செயலர் மணி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் டி. புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai