Enable Javscript for better performance
நாச்சியார்கோவிலில் பங்குனித் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 20-வது திவ்யதேசமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் 40 இல் 14- வது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது. இங்கு மூலவராகவும், உற்சவராகவும் விளங்கும் கல்கருட பகவான் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் உற்சவராக வீதியுலா வருவது பிரசித்தி பெற்றது.
    ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, பெருமாள் தாயார் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடிமரம் முன்பாக எழுந்தருளினர்.
    தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள், அபிஷேகம் ஆகியவை நடைபெற்று, பின் கொடியேற்றமும், மகாதீபாரதனையும் நடைபெற்றது.
    விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடைபெறுகிறது. நான்காம் நாள் விழாவான உலக பிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி வருகிற 26 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமப்பர். கருடபகவான் வாகன மண்டபம் எழுந்தருளும் கருடச் சேவையின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலின் வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்வது சிறப்பு. 9 ஆம் நாள் விழாவாக வருகிற 31 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் சீ. நிர்மலாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai