Enable Javscript for better performance
கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால்   நெடுஞ்சாலையில் வேலி அமைத்து  போக்குவர- Dinamani

சுடச்சுட

    

    கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால்   நெடுஞ்சாலையில் வேலி அமைத்து  போக்குவரத்தை மறித்த விவசாயி

    By DIN  |   Published on : 31st March 2018 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அருகே நெடுஞ்சாலைத் துறையினர் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால், அதிருப்தியடைந்த விவசாயி சாலையில் வெள்ளிக்கிழமை வேலி அமைத்து மறித்தார்.
    கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவாரூர் - மயிலாடுதுறை புறவழிச்சாலை அமைப்பதற்கு 2009 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நெடுஞ்சாலை துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  
    நாச்சியார்கோவில் வடக்குத் தெருவைச் சேர்ந்த கோபால் (63) விவசாயம் செய்து வந்த இரு ஏக்கர் நிலத்தில் புறவழிச்சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் 22 ஆயிரம் சதுரஅடி நிலம் கையகப்படுத்தினர். ஆனால், அதற்குரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
    அப்போது ஒரு சென்ட் இடத்துக்கு ரூ. 607 தருவதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஒரு லட்சத்து 20 ஆயிரமாக வழங்க வேண்டும் என விவசாயி கோபால் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு கோபாலுக்கு சொந்தமான மேலும் 12 ஆயிரம் சதுரஅடி நிலத்தை நெடுஞ்சாலைத் துறையினர் அவருடய அனுமதியின்றி ஆக்கிரமித்து புறவழிச்சாலையை அகலப்படுத்தினர். இதுதொடர்பாகவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கோபால் வழக்குத் தொடுத்தார்.
    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோபாலுக்கு சொந்தமான இடத்தை அவர் எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து சாலையில் மணல் மூட்டைகளை வைத்து அடைத்தார். இதையடுத்து, கோபாலிடம் வருவாய், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்துக்கு உரிய தொகையை வழங்குவதாக உறுதியளித்துவிட்டு, மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் விவசாயி கோபால் 22 ஆயிரம் சதுரஅடிக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நெடுஞ்சாலைத் துறை இதுவரை வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கோபால் தனக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலையின் இருபுறத்திலும் வெள்ளிக்கிழமை அதிகாலை சவுக்குக் கட்டைகளால் வேலி அமைத்து, மணல் மூட்டைகளை வைத்து அடைத்தார். எனவே, அவ்வழியாக கும்பகோணத்தில் இருந்து திருநாகேசுவரம், திருவாரூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்லும் வாகனங்களும், திருவாரூர், சென்னை ஆகிய ஊர்களில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த வாகனங்களும் எந்த வழியாகச் செல்வது எனத் தெரியாமல் குழப்பமடைந்தனர். 
    தகவலறிந்த அலுவலர்கள், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வேலியை அகற்றுமாறு கோபாலிடம் கூறினர். ஆனால், கோபால் அகற்ற மறுத்துவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai