Enable Javscript for better performance
"நடராசன் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்குவோம்'- Dinamani

சுடச்சுட

  

  மறைந்த ம. நடராசன் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்குவோம் என தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவரது நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
  இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியது:
  நட்பு, விருந்தோம்பல், பண்பு பாராட்டுவது என எல்லாவற்றுக்கும் இலக்கணமாக வாழ்ந்தவர் நடராசன். மாணவர் பருவத்திலேயே அவர் தமிழ் மொழிக்காகப் போராடத் தொடங்கியவர். வாழ்நாள் முழுவதும் மொழிக்காகவே வாழ்ந்தார். 
  ஈழத் தமிழர் பிரச்னையில் அவர் காட்டிய உணர்வு உள்ளார்ந்தது. முள்ளிவாய்க்கால் சம்பவம் தொடர்பாக முதலில் நினைவுத் தூண்தான் அமைக்க முடிவு செய்தோம். அதற்கு நடராசன் நிலம் கொடுத்து, அத்திட்டத்தை விரிவாக்கி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைக்கக் காரணமாக இருந்தார். மொழி, நாடு போன்றவற்றில் அவர் கடைப்பிடித்த கொள்கைகளை நாமும் இறுதி வரை பின்பற்றுவோம் என்றார் நெடுமாறன்.
  ம. நடராசன் படத்தைத் திறந்துவைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு பேசியது:
  தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் உணர்த்தியது மட்டுமல்லாமல், உலக அறிஞர்களிடமும் அறியச் செய்தார். தஞ்சாவூருக்கு வரும் மக்கள் பெரியகோயிலை பார்ப்பதுபோல முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தையும் பார்க்கச் செய்ய வேண்டும் என்பதற்காக மிகுந்த ஆர்வத்துடன் இருந்து உருவாக்கினார் என்றார் நல்லகண்ணு.
  ம. நடராசன் குறித்த மலரை வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியது:
  நடராசன் மறையாத மாவீரர். நம் நெஞ்சுக்குள் உறைந்துவிட்டார். உள்ளூர் தமிழர்கள் மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் வரை அனைவருக்கும் அரணாக இருந்தார். அவர் காண விரும்பிய மானமுள்ள,  அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்கி அவரது எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார் வீரமணி.
  மலரைப் பெற்றுக் கொண்ட சசிகலாவின் சகோதரரும், செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி தாளாளருமான வி. திவாகரன் பேசியது: அவர் ஒரு மறைக்கப்பட்ட சரித்திரம். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு எதிரே அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 பேர் மொட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அவரது பெருமை மேலும் தெரிந்தது என்றார் திவாகரன்.
  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: 
  இந்தச் சமூகம் வாழ்வதற்காகப் பாடுபட்டவர் நடராசன். அவரை இந்தச் சமூகம் மறக்காது. அவர் மரணிக்கவில்லை; நம் உள்ளத்தில் வாழ்கிறார் என்றார் சீமான்.
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியது:
  நடராசனின் தமிழ் மொழி மீதான பற்று குறித்து அனைவரும் பேசினர். ஆனால், அதைவிட அவர் இல்லற வாழ்வை இழந்து ஆற்றிய தியாகம் மகத்தானது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை ஜெயலலிதா காப்பாற்றினார்.
  ஜெயலலிதாவை நடராசன் குடும்பத்தினர் காப்பாற்றினர் என்றார் திருமாவளவன்.
  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தொடக்கவுரையாற்றினார். திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர். ராமசாமி, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் பெ. ஜான் பாண்டியன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ. தனியரசு, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், மனித நேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலர் தமீமுன் அன்சாரி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், கவிஞர் காசி ஆனந்தன், கனடா நாட்டைச் சேர்ந்த மெர்லின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai