Enable Javscript for better performance
விவசாயிகள் கோடை உழவு செய்ய வேளாண்துறை யோசனை- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டுமென வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
    தமிழகத்தில் ஒரு ஆண்டின் மழை அளவான 960 மில்லி மீட்டரில்  8-ல் 1 பங்கு மழை கோடை காலத்தில் பெய்கிறது. இந்த மழையை விவசாயிகள் வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    சாகுபடிக்குப் பிறகு தரிசாக உள்ள நிலப்பகுதி கடினமாக இருக்கும். இந்த நிலத்தை கோடையில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி நன்கு உழவு செய்தால் மண்ணின் இறுக்கம் குறைந்து, பொலபொலவென ஆகிவிடும். இதனால், மண்ணுக்குள் காற்றோட்டமும், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். 
    நோய் மற்றும் பூச்சிகளைப் பரப்பும் காரணியான களைச்செடிகள் அழிக்கப்பட்டு மண்ணில் மக்கி உரமாகிவிடுவதால், களைகளின் தாக்குதல் கணிசமாக குறைந்து விடும். 
    இதுதவிர, மண்ணுக்குள் இருக்கும் பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் நிலத்தின் மேலே கொண்டு வரப்பட்டு, பறவைக்கு உணவாகிறது.
    நீர் ஊடுருவி செல்வதற்கான தன்மை அதிகரிக்கிறது. டிராக்டர் மூலம் உழும்போது 5 கொத்து கலப்பை மூலம் உழுவது சிறப்பானதாகும். இதனால் அடுத்த பருவத்திற்கு பயிர் சாகுபடி செய்வது மிகவும் எளிதாகிறது. 
    நெல் அறுவடைக்குப் பின் தேங்கியுள்ள தாள்களில் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யும். கோடை உழவு செய்வதால் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக உள்ள தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகி விடுகிறது. 
    எனவே, விவசாயிகள் அனைவரும் தவறாமல் கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்தால் நில வளத்தை பெருக்கிப் பாதுகாக்க முடியும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai