கடைமடைக்குத் தண்ணீர் வராவிட்டால் போராட்டம்: விவசாயிகள் சங்கம் முடிவு

அரசு அலுவலர்கள் ஒப்புதல் அளித்தபடி கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் தராவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவது என


அரசு அலுவலர்கள் ஒப்புதல் அளித்தபடி கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் தராவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சிறப்புப் பேரவை மற்றும் மாவட்டக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கடைமடைப் பகுதிகளுக்கு ஒருபோக சாகுபடிக்குத் தண்ணீர் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பலமுறை போராட்டம் நடத்தியது. செப். 4-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, கடைமடைக்கு முறை வைக்காமல், செப். 20-ம் தேதிக்குள் தண்ணீர் வழங்கப்படும் என்றும், ஏரி, குளங்களுக்குத் தண்ணீர் நிரப்பித் தரப்படும் எனவும் அலுவலர்கள் உறுதி அளித்தனர். ஆனால் அலுவலர்கள் உறுதியளித்தபடி இதுவரை கடைமடைக்கு முறையாகத் தண்ணீர் வழங்கப்படவில்லை. ஏரி, குளங்களைத் தண்ணீர் நிரப்பித் தரவில்லை. எனவே செப். 20-ம் தேதிக்குள், ஒப்புக்கொண்டபடி கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வழங்காவிட்டால், அடுத்தக் கட்டப் போராட்டத்தைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிக்கும். மேலும் விவசாயப் பணிகளுக்காக விவசாயிகள் அனைவருக்கும் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் வழங்க வேண்டும். மத்திய அரசு டெல்டா பகுதிகளில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது. அவ்வாறு நிறைவேற்றினால் விவசாயிகளைத் திரட்டி தொடர்ந்து போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு பி. செந்தில்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் பெ. சண்முகம், துணைச் செயலர் சாமி. நடராஜன் சிறப்புரையாற்றினர். மேலும், சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி. செந்தில்குமார், செயலராக என்.வி. கண்ணன், பொருளாளராக எம். பழனிஅய்யா உள்பட 25 பேர் கொண்ட மாவட்டக் குழு அமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com