காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரிப் படுகையில் 5 குழுக்கள் நாளை முதல் கள ஆய்வு

காவிரிப் படுகையில் நீர் மேலாண்மை மறு சீரமைப்புக்காகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திங்கள்கிழமை (செப்.17) ஐந்து குழுக்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளன.


காவிரிப் படுகையில் நீர் மேலாண்மை மறு சீரமைப்புக்காகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திங்கள்கிழமை (செப்.17) ஐந்து குழுக்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளன.
இதுகுறித்து குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: நம்முடைய காவிரிப் படுகை நீர் மேலாண்மை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை நிகழாண்டு வந்த காவிரி வெள்ளம் வெளிப்படுத்திவிட்டது.
மாயனூரிலிருந்து வங்கக்கடல் வரை உள்ள காவிரிப் படுகை நீர் மேலாண்மையில் மாபெரும் மறுசீரமைப்புத் திட்டங்கள், பணிகள் செயல்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது. இதற்கான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் காவிரி உரிமை மீட்புக் குழு அளிக்க உள்ளது. இதை முன்னிட்டு, கள ஆய்வு செய்து மக்களிடம் கருத்துக் கேட்பது, அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளைப் பெறுவது ஆகிய நோக்கங்களுக்காக காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 5 குழுக்கள் கல்லணையிலிருந்து திங்கள்கிழமை காலை 9 மணிக்குப் புறப்படுகின்றன.
கல்லணையிலிருந்து மேற்கு நோக்கிக் கரூர் வரை தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.ப. சின்னத்துரை தலைமையிலான குழுவும், கல்லணையிலிருந்து காவிரிக் கரையோரங்களில் பூம்புகார் வரை காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளர் த. மணிமொழியன் தலைமையில் ஒரு குழுவும், கல்லணையிலிருந்து கொள்ளிடம் கரை கிராமங்களில் வல்லம் படுகை வரை விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் ஒரு குழுவும், கல்லணையிலிருந்து வெண்ணாற்றங்கரை ஓரங்களில், அதன் கிளை ஆறுகளில் முத்துப் பேட்டை வரை மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் தலைமையில் ஒரு குழுவும், கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் பேராவூரணி வரை தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ. திருநாவுக்கரசு தலைமையில் ஒரு குழுவும் என ஐந்து குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கைகள் தயாரிக்க உள்ளன.
இக்குழுவினர் வரும்போது அந்தந்தப் பகுதி கோரிக்கைகளை மக்கள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com