தஞ்சாவூர் மாவட்டத்தில் 250 கி.மீ. சாலையை மேம்படுத்த ரூ. 109 கோடி நிதி ஒதுக்கீடு

மாநில நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 250 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு

மாநில நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 250 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு நிகழாண்டு ரூ. 109 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் 2,300 கி.மீ. நீள சாலைகள் உள்ளன. இதில் தஞ்சாவூர் உள்கோட்டத்தில் மட்டும் 208 கி.மீ. நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக குறுகலான சாலைகளை அகலப்படுத்தியும், சேதமடைந்த சாலைகளை புதுப்பித்தும், வலுப்படுத்தும் பணிகளுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதை நிறைவேற்றும் வகையில், சீரமைக்கப்பட வேண்டிய சாலைகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தது. அதன்படி, தஞ்சாவூர், திருவையாறு, திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய 8 உட்கோட்டங்கள் வாரியாக ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு நடத்தி, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
இதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட சாலைகளை சீரமைக்க ரூ. 109 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
இந்த நிதியின் மூலம் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலை, கல்லணை - காவேரிபூம்பட்டினம் சாலை, பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலை, பட்டுகோட்டை - அதிராம்பட்டினம் சாலை, பட்டுகோட்டை - பேராவூரணி சாலை, வல்லம் - ஒரத்தநாடு சாலை, மன்னார்குடி - ஒரத்தநாடு சாலை, தஞ்சாவூர் - கரம்பக்குடி சாலை என உள்ளிட்ட 83.10 கி.மீ. நீளமுள்ள மாநில முக்கிய நெடுஞ்சாலைகளும் (எஸ்எச்), மாவட்ட இதர சாலைகளும் (எம்டிஆர்) ரூ. 45 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன.
இதையடுத்து, வல்லம் - புதூர் சாலை, குரும்பூண்டி சாலை, வல்லம் - கள்ளப்பெரம்பூர் சாலை, குளிச்சப்பட்டு - காட்டூர் சாலை, கல்லணைக் கால்வாய் சாலை, தொண்டராம்பட்டு சாலை, உளூர் - சடையார்கோவில் சாலை மற்றும் பல்வேறு சிறு சிறு சாலைகள், குறிப்பிட்ட பகுதிகள், சாலை சந்திப்புகள் உள்ளிட்ட 167. 61 கி.மீ. நீளமுள்ள மாவட்ட இதர சாலைகள் (ஓடிஆர்) ரூ. 64 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன.
ஆக மொத்தம் 250 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ. 109 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன. மேற்கண்ட சாலைகளில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 24 சிறுபாலங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், அகலப்படுத்துதல், தார் தளங்களை புதுப்பித்தல், வலுப்படுத்துதல், சீரமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
விரைவில் பணிகள் தொடக்கம்...: இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் மோசமான மற்றும் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள அனைத்து சாலைகளையும் முழுவதுமாக ஆய்வு செய்து, கணக்கெடுத்து வைத்துள்ளோம். இதில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள, முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளுக்கு நிகழாண்டில் முன்னுரிமை அளித்து ரூ. 109 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து, நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக நிகழ் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட உள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கப்பட்டு, ஓராண்டுக்குள் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைகள் அடுத்தடுத்த கட்டங்களாக சீரமைக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com