"நரேந்திர மோடி ஒரு தோல்வியடைந்த பிரதமர்'

நரேந்திர மோடி தோல்வியடைந்த பிரதமராகி விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் குற்றம்சாட்டினார்.

நரேந்திர மோடி தோல்வியடைந்த பிரதமராகி விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் குற்றம்சாட்டினார்.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டதில் ஊழல் புரிந்த மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் எதிரே காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் மேலும் பேசியது:
நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டில் பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. 
விளைபொருள்களுக்கு லாபகரமான விலைக் கிடைக்கச் செய்வேன் என்றார். ஆனால், அதில் பிரதமர் தோல்வியடைந்ததால் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆதிதிராவிட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதி, அதிகாரமளித்தல், பாதுகாப்பு அளிக்கப்படும் என அளிக்கப்பட்ட உறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் என அளித்த வாக்குறுதிக்கு மாறாக விலைவாசி அதிகரித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த மோடி தவறிவிட்டார்.
எனவே, மோடி தோல்வியடைந்த மனிதராக, பிரதமராக மட்டுமல்லாமல், அவர் செயலற்றத் தலைவராகி விட்டார். அவரது ஆட்சியில் ஊழல் அதிகமாகிவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் அவரது பரிசுத்தம் தோல்வியடைந்து விட்டது. 
மன்மோகன் சிங் ஆட்சியில் ஒரு போர் விமானம் ரூ.526 கோடிக்கு வாங்க ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் அதே விமானத்தை ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய விமானப்படை ஒப்புதல் இல்லாமலே போர் விமானங்களை மத்திய அரசு வாங்குகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார் முகுல் வாஸ்னிக்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத் பேசியது: மோடி அரசின் ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும். மோடி 2014ஆம் ஆண்டில் மோசடியான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவர் எதையுமே நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால், அதிக அளவில் வரி விதித்து, மக்கள் பையில் இருக்கும் பணத்தை இந்த அரசுப் பறித்து வருகிறது என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பி.ஜி.ராஜேந்திரன், து.கிருஷ்ணசாமி வாண்டையார், டி.ஆர்.லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com