மக்களின் கவனத்தைத் திசை திருப்ப பாஜக பொய் பிரசாரம்: பீட்டர் அல்போன்ஸ்
By DIN | Published On : 04th April 2019 08:36 AM | Last Updated : 04th April 2019 08:36 AM | அ+அ அ- |

மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக பாஜகவினர் பொய் பிரசாரம் செய்கின்றனர் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பிரசார குழுத் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ்.
தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுகவை சேர்ந்த மக்களவை வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகத்தை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:
இந்து மதம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பாஜகவினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். நம் நாட்டில் முஸ்லிம்கள் 13 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2 சதவீதமும், சமணர்கள், பார்சியர்கள் ஒரு சதவீதத்துக்குக் குறைவாகவும் உள்ளனர். இந்நிலையில், 87 சதவீத இந்துக்களை இவர்கள் அழித்துவிடுவர் என பொய் பிரசாரம் செய்து, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, கவனத்தை திசை திருப்பி தேர்தலில் வெற்றி பெற நினைக்கின்றனர். தமிழகத்தின் பார்வையில் அகில இந்திய தேர்தலைப் பார்க்க வேண்டும். யார் பிரதமராக வந்தாலும், எந்த அரசுப் பொறுப்பேற்றாலும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள், திட்டங்களை, நிதிகளைப் பெற்று, தமிழர்களுடைய வாழ்க்கையைச் செம்மைபடுத்தக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லவில்லை என்றால், தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை அடிமைச் சாசனத்துக்குள் செல்லும் என்கிற மிகப் பெரிய அபாயம் ஏற்படும். அதற்கு மத்தியில் ராகுல் காந்தி பிரதமராகும்போது, தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.
கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலர் துரை. சந்திரசேகரன், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ச. சொக்கா ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.