அமமுக - அதிமுக தகராறு: போலீஸார் வழக்குப் பதிவு
By DIN | Published On : 12th April 2019 09:28 AM | Last Updated : 12th April 2019 09:28 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் அமமுக - அதிமுக இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீஸார் இரு தரப்பினர் மீதும் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் செவ்வப்பநாயக்கன்வாரி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32). அமமுக 20-வது வார்டு உறுப்பினர். உடலில் காயங்களுடன் இருந்த இவரை மேற்கு போலீஸார் வியாழக்கிழமை காலை அழைத்து வந்து காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர்.
தகவலறிந்த அமமுகவினர் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தனர். குடிபோதையில் தகராறு செய்ததாக வந்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தியைப் பிடித்து வந்ததாக போலீஸார் கூறினர். அதிமுகவில் சேருமாறு அக்கட்சியினர் கூறியதை ஏற்க மறுத்ததால், தன்னை தாக்கினர் என சத்தியமூர்த்தி கூறினார்.
எனவே, நிலையத்துக்குத் திரண்ட அமமுகவினர் முழக்கங்கள் எழுப்பினர். இதை அதிமுக வார்டு செயலர் மூர்த்தி செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்ததாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர், இரு தரப்பினரிடமும் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் பின்னர் தஞ்சாவூர் கோட்டைப் பகுதி அதிமுக தொழில்நுட்பப் பிரிவு செயலர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் அமமுகவைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவை சேர்ந்த சரவணன், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.