"அரசியலில் மதச்சார்பற்ற கொள்கைகள்தான் இருக்க வேண்டும்'
By DIN | Published On : 12th April 2019 09:28 AM | Last Updated : 12th April 2019 09:28 AM | அ+அ அ- |

அரசியலில் மதச்சார்பற்ற கொள்கைகள்தான் இருக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு.
ஒரத்தநாட்டில் பேருந்து நிலையம் அருகே தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வாக்குகள் கேட்டு வியாழக்கிழமை அவர் மேலும் பேசியது:
பாஜக அரசுக்கு மக்களை பற்றிய கவலை இல்லை. அவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். அரசியல் வேறு, மதம் வேறு, அரசியலில் அனைத்து மதத்தினரும் சமம். மதச்சார்பற்ற கொள்கைதான் அரசியலில் இருக்க வேண்டும்.
ஆனால், பாஜகவிடம் மதச்சார்பற்ற கொள்கை இல்லை. அரசியல் சாசனத்தையே திருத்த வேண்டும் என்று நினைத்து செயல்படுகின்றனர். கஜா புயல் பாதித்தபோது தமிழகத்திற்கு மோடி வரவில்லை. விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மத்திய பாஜக அரசு. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினருக்கு கொள்கை கிடையாது. தமிழகத்தில் தங்களின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். எனவே, நாட்டின் நலன் கருதியும் வளமான எதிர்காலத்துக்கும் மதச்சார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் துரைமாணிக்கம், மாவட்ட செயலாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.