சுடச்சுட

  

  பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, கலை இலக்கிய இரவு ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை விடிய, விடிய நடைபெற்றது.
  இதில், அண்மையில் மறைந்த கவிஞர் கல்யாணசுந்தரம் மனைவி கௌரவம்பாளுக்கு அஞ்சலி செலுத்தி, திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி பேசியது: 
  அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் தேசத்தில் எவரையும் ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ ஒடுக்க கூடாது, நசுக்கக் கூடாது என்று சொல்கிறது. அதன்படி இன்றைக்கு நாட்டில் நடக்கிறதா என்றால் இல்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு டெல்டா மண்டலம் தாரை வார்க்கப்படுகிறது. அணுஉலை, நியூட்ரினோ என மக்களுக்கு ஆபத்தான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதுதான் நாட்டில் இன்றைக்கு நாம் காணக்கூடிய வளர்ச்சியாக உள்ளது என்றார்.  
  முன்னதாக தமுஎகச கிளைத் தலைவர் முருக.சரவணன் தலைமையில் மாவட்டச் செயலர் இரா. விஜயகுமார் கலை இரவு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாநில துணைப் பொதுச் செயலர் கவிஞர் களப்பிரன் வாழ்த்திப் 
  பேசினார். பா.சாதனா,பி.சாய் மானஷா, ஜெ.ஹர்ஷினி ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.  மண் மணக்கும் பாடல்களை புதுக்கோட்டை சுகந்தி பாடினார். க. செந்தமிழ்ச்செல்வன், மா. முரளிதரன் ஆகியோரின் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில பொதுச்செயலர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  கவிஞர் வல்லம் தாஜூபால் 'தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்' என்ற தலைப்பில் கவிதை பாடினார். சென்னை மாற்று ஊடக மையப் பேராசிரியர் இரா.காளீஸ்வரன் குழுவினரின் பறையாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம் ஆகியன நடைபெற்றன. 
  தொடர்ந்து, கவிஞர் இனியன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்கள் மருத்துவர் ச.வீரமணி, ஆம்பல் காமராஜ், பெரமநாதன், நாகராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர். தமிழாசிரியர் தமிழவன், என்.கந்தசாமி, ஊரணிபுரம் தங்கராஜ் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தனர். தொடக்கத்தில் கிளைச் செயலர் மோரீஸ் அண்ணாதுரை வரவேற்றார். நிறைவாக கிளைப் பொருளாளர் கா.பக்கிரிசாமி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai